படிக்காசு நாதர் கோவில் -அரிசிற்கரைபுத்தூர் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு நாதர்
இறைவியார் திருப்பெயர் : அழகாம்பிகை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, அரசலாறு
வழிபட்டோர் : புகழ்த்துணை நாயனார், முருகன்
தேவாரப் பாடல்கள் : அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்,


தல வரலாறு:

நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்.

புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது.
தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.


இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.

மூலவர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். நாடொறும் மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

புகழ்த்துணை நாயனார்: அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. முதுமையின் துயரம் போதாதென்று ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரனத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனார் உன் துனபங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது.

ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், "நீங்கள் யார்?' எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.

முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்? எனக்கேட்டார். "ஓம்' என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான்! என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை.

சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

சிவன், அவருக்கு காட்சி தந்து ""தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது,'' என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

சங்கு, சக்கர முருகன்: ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க முருகனை அனுப்ப எண்ணினார் சிவன். எனவே, இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.

திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது.

இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, "கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர்' என்று அழைக்கிறார்கள். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாட்சி "ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.

கோவில் அமைப்பு:

எதிரெதிரே சூரிய,சந்திரன்: அரசலாற்றின் தென்திசையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. பொதுவாக நவக்கிரக மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் கிழக்கு திசை நோக்கியே இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவ்விருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர்.

எதிரே ஒன்பது குழிகளும் இருக்கிறது. இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும், நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள்.

படிக்காசு பூஜை: படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. 


சிறப்புக்கள் :

புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

இங்கு வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு அமாவாசையன்று பால் பாயச நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.



போன்:   +91- 435 - 246 6939, +91-99431 78294

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.



புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது.

சூரிய,சந்திரன் எதிரே ஒன்பது குழிகள் இருக்கிறது. இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும், நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள்.

இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.