வீரட்டானேஸ்வரர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : வீரட்டானேசுவரர், வீரட்டானேஸ்வரர்,
இறைவியார் திருப்பெயர் : ஏலவார் குழலம்மை, பரிமள நாயகி்,
தல மரம் :துளசி்,
தீர்த்தம் : சக்கர, சங்கு தீர்த்தங்கள்
வழிபட்டோர் :திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தை,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:


அட்ட வீரட்டத்தலங்களுள் ஓன்று.

இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி  தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.


அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல்  வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.

இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்தமூர்த்தி - 'ஜலந்த்ரவதமூர்த்தி - தலச்சிறப்பு மூர்த்தி (உற்சவத்திருமேனி) தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து நேரே சென்றால் மூலவர் சந்நிதி.

முன்னால் இடப்புறம் அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் அமைந்த நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி உள்ளது. அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளம் உரிய கட்டமைப்பில் அமைக்கப்ட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது மண்டபத்தின் இடப்பால் நடராஜ சபை. எதிரில் (தெற்கு) வாயிலும் சாளரமும் உள்ளன.

துவார பாலகரைத் தொழுது, தூவர கணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார், மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உளர் .சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன


போன்:  +91-94439 21146

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு (1) திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் (SH23) வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில் (SH148) வலதுபுறம் திரும்பி விற்குடி ரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி வீரட்டேசம்" என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (வளப்பாறு பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

(2) நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து, கார் செல்லும். திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்


அட்ட வீரட்டத்தலங்களுள் ஓன்று.இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.

சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.