பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர்,
இறைவியார் திருப்பெயர் : சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி, வம்பவனப் பூங்குழலி,
தல மரம் : புன்னை,
தீர்த்தம் : பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம்,
வழிபட்டோர் : சோமாசிமாற நாயனார், பிரம்மன்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

“எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில் நரிதிரி கானிடை நட்ட மாடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே. !"

தல வரலாறு:

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம் இதுவே.

அம்பல் பிரமபுரீசுவரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 54ஆவது சிவத்தலமாகும். சோமாசிமாற நாயனார் வசித்த தலம் எனப்படுகிறது.

சோமாசிமாற நாயனாருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற வேண்டும் என்று நினைத்தார். இந்நிலையில் சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும். கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர். அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.

இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப் போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர். சோமாசிமாற நாயனார் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

சோமாசிமாறர் யாகம் செய்த இடம் அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில் சாலையோரத்தில் உள்ளது. திருமால், பிரமன் ஆகிய இருவருமே தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன். இவ்வனற்பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக் காண புறப்பட்டு தேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்துசென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார். பெருமன் பிரமனை அன்னமாகும்படி சபித்தார். பிரமன் பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரமனும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார்.

பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது. துர்வாச முனிவருக்கு மதலோலா என்ற தேவகன்னிகையால் தோன்றிய அம்பரன், ஆம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். பெருமான் கட்டளைப்படி அம்பிகை காளியை நோக்கினாள். காளி கன்னி உருவோடு வந்தாள். இருவரும் அம்மையை சாதாரண பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும். கொலைப்பழி தீரக் காளி திருமாகாளத்தில் இறைவனைப் பூஜித்து அருள்பெற்றார்.

இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். கர்ப்ப கிரகத்தில் சுயம்புமூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால் சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம். இக்கோவிலில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன. இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியவை. சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம். பெருந்திருக்கோவில் என்பது யானையேறாதவாறு படிக்கட்டுகள் அமைந்துக் குன்றுபோல் செய்யப்பட்ட மாடக்கோவில் என்பதாகும்.

கோச்செங்கட் சோழ மன்னரால் திருப்பணி செய்யப் பெற்ற மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.விமலன் என்ற அந்தணன் தீர்த்தயாத்திரை செய்துகொண்டே இத்தலத்தில் வந்து தங்கி பல்லாண்டுகள் வழிபட்டான். காசிக்கங்கையை இறைவன் இங்கு வரச்செய்து வேண்டும் வரங்கள் அருளினான்.

திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ்இருந்து ஜம்புகேஸ்வரரை முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட பெரும்பேற்றால் கோச்செங்கட்சோழ மன்னராகப் பிறந்து யானை ஏறாத எழுபது மாடக்கோயில்களைக் கட்டியவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அம்மன்னர் செய்த கோயிலே இது. ஜம்புகேஸ்வரர் ஆலயமும் இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


போன்:  91 4366 238 973,

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருவாரூர் மாவட்டத்தில்  மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து 23கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது 'அம்பல்' என்று வழங்கப்படுகிறது. பேரளத்திற்குத் தென் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம் .

கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட ஆலயம்.

திருமால், பிரமன் ஆகிய இருவருமே தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன்.

இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.