பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : பதஞ்சலி மனோகரர்
இறைவியார் திருப்பெயர் : யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி
தல மரம் : வில்வம், கிளுவை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
வழிபட்டோர் : பதஞ்சலி முனிவர்,விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள், வியாக்ரபாத முனிவர், சூரியன்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:

திருவிளமர் (தற்போது விளமல் என்று வழங்குகிறது)

இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.

சிவபெருமானின்  ருத்ரபாதம் இருக்கும் தலம், சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால் சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.


பதஞ்சலி முனிவர் ஈசனின் நடனக்கோலம் காண தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தை காண்பித்தார். இந்த நடனத்தை வியாக்ர பாதரும் கண்டு மகிழ்ந்தார். அத்துடன் இரு முனிவர்களும் சிவனிடம், ஐயனே! உனது நடனம் கண்டோம். இந்த ஆனந்த நடனத்துடன் தங்களின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். மேலும் உன் பக்தர்களுக்கும் உனது திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும்,என வேண்டினர். அதற்கு ஈசன், நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எனது நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்,என்றார்.அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது. எனவே பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் காலை புலிக்காலாகவும் மாற்றி திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர்.

அவள் கூறியபடி விளமல் என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் லிங்கம் பிடித்து வழிபட்டார். இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி, அஜபாவன நர்த்தனம் ஆடி தன் பாதத்தை காட்டி அருளினார். இந்த சிவன் பதஞ்சலி மனோகரர் என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் நடன மாடிய போது காட்டிய திருவடி ருத்ரபாதம் எனப்பட்டது. அவர் நடனமாடிய இடம் விளமல் எனப்பட்டது. இதற்கு திருவடிஎனப்பொருள். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம், திருவிளமல், சிவபாத ஸ்தலம் என போற்றப்படுகிறது.

மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதி யில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். மூலவர் சிவன் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.

சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் சடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் பிரச்னை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இத்தல விநாயகராக சித்தி விநாயகர் காட்சி தருகிறார். இங்குள்ள ராஜதுர்க்கை எட்டு கைகளுடன் வீற்றிருக்கிறாள். வலது கையில் சூலமும், இடது கையில் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்தில் இருப்பது சிறப்பு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த துர்க்கையை வழிபாடு செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று.சிவனின் பாத தரிசனம் காட்டிய தலமாதலால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. இத்தலத்தில் நந்தி, சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய வடகிழக்கு திசையை நோக்கி தலை திருப்பி இருப்பதை இன்றும் காணலாம். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகரின் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றினால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இரண்டு பக்கமும் ஐராவதம் நிற்க, மகாலட்சுமி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.


கோவில் அமைப்பு:

சிறிய ஊர், கோயிலும் சிறியது. கிழக்கு நோக்கிய சன்னதி. கோயில் எதிரில் தீர்த்தம் உள்ளது. கோபுரவாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம், பிராகாரம் நந்தவனமாக உள்ளது. பிராகாரத்தில் சனீஸ்வரன், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, உள்ளனர். முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும் மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்புக்கள் :

சிவபெருமானின்  ருத்ரபாதம் இருக்கும் தலம், சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

 

போன்:  94894 79896, 99428 81778

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது.



இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.

சிவபெருமானின் ருத்ரபாதம் இருக்கும் தலம்.

திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.