வெள்ளிமலைநாதர் திருத்தெங்கூர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : ரஜதகிரீஸ்வரர், வெள்ளிமலைநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி
தல மரம் : தென்னை
தீர்த்தம் : சிவகங்கை
வழிபட்டோர் : லட்சுமி தேவி, நவக்கிரகங்கள்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - புரைசெய் வல்வினை.


தல வரலாறு:

ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படிஉலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது. உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது. உமையம்மைக்கு விருப்பமான தலம் என்பதையும், திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம் என்பதையும் தெரிந்து கொண்ட நவக்கிரகங்கள் இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனடைந்தார்கள். தென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் "தெங்கூர்" என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது என்றும் கூறுவர். அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.

சிவகங்கை தீர்த்தம்:

கங்கை நதியில் நீராடுபவர்களின் பாவங்களைச் சுமந்து வாடிய கங்கை, அந்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ள பூலோகத்தில் உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி சிவபூஜை செய்தாள். அப்படியும் பாவம் முழுவதும் போய் விடவில்லை. இந்த நிலையில் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அறிந்தாள். சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி. திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி 48 நாட்கள் செந்தாமரை மலர்களால் சிவனுக்கு பூஜை செய்தாள். கங்கைக்கு காட்சி தந்த ஈசன் அவள் பாவங்களை எல்லாம் போக்கினார். மேலும் அவள் உருவாக்கிய தீர்த்தத்திற்கு சிவகங்கை தீர்த்தம் எனப் பெயரிட்டு அதில் நீக்கமற எப்போதும் நிறைந்திருக்க அருளாசி புரிந்தார்.

கோவில் அமைப்பு:

இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் பலிபீடத்தையும், நந்தியையும் காணலாம். கொடிமரத்திற்கு பதில் கொடிமர விநாயகர் உள்ளார். இரண்டு பிரகாரங்கள் உள்ள இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப் பிரகாரம் முழுவதும் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து அதனால் பிரகாரம் சுற்றி வர முடியாமல் காணப்படுகிறது. வலதுபுறம் அம்பாள் பெரியநாயகி சந்நிதி தனிக்கோயிலாக இருப்பதைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டிச் சென்றால், நேரே மூலவர் தரிசனம். கருவறை வாயிலிலுள்ள துவாரபாலகர்களையும், மற்றும் இருபுறமும் உள்ள விநாயகர், சுப்பிரிமணியரையும் வணங்கி உட்சென்று கிழக்கு நோக்கி சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தரும் மூலவரைத் தரிசிக்கலாம். உட்பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவற்றைக் காணலாம். நடராஜ சபையும் இப்பிரகாரத்தில் உள்ளது. பைரவர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உள்ள சந்நிதிகளில் முக்கியமானவை இரண்டு. அவற்றில் முதலாவதுமகாலட்சுமியின் சந்நிதி. மகாலட்சுமி சிவபூஜை செய்த தலமாதலால் இச்சந்நிதி முக்கியமானது. அடுத்தது வடக்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் ஸ்தாபித்த சிவலிங்கங்கள். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த திருத்தங்கூர் திருத்தலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படுகிறது. இந்த சூரிய பூஜையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடுகிறார்கள்.



சிறப்புக்கள் :

திருமகளும், நவக்கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது.

சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கும்,பாண்டியரது ஒன்றும் உள்ளன.

தலமரத்தின் பெயரால், இது தெங்கூர், எனப்படுகிறது.

மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள்

திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது

போன்:  +91- 4369 237 454, 94443- 54461

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூரில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நானகு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல் சென்று அதே சாலையில் மேலும் 2 கி.மி. சென்றால் திருதெங்கூர் தலத்தை அடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி. திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி 48 நாட்கள் செந்தாமரை மலர்களால் சிவனுக்கு பூஜை செய்தாள்.


திருத்தங்கூர் திருத்தலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படுகிறது. இந்த சூரிய பூஜையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடுகிறார்கள்.

இந்த கோவிலை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு