சொர்ணபுரீசுவரர் கோவில் - ஆண்டாங்கோவில் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சொர்ணபுரீசுவரர்
இறைவியார் திருப்பெயர் : சிவாம்பிகை, சொர்ணாம்பிகை
தல மரம் : வன்னி
தீர்த்தம் : திரிசூலகங்கை
வழிபட்டோர் : காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர், அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர்
தேவாரப் பாடல்கள் : அப்பர்,

தல வரலாறு:

சொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது இத்தலம் ஆண்டான்கோவில் என்று வழங்குகிறது)

குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது.


இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.

முசுகுந்த சக்கரவர்த்தின் மந்திரி  கண்டதேவர் திருவாரூர் கோயில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார், இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.

சிவன் இவரது கனவில் தோன்றி, "நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,''என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார்.

மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார்.

ஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார்.
மன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,"மந்திரியாரே! இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,''என்றார். அதற்கு மந்திரி, "மன்னா!என் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,''என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,""என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,'' என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது.

வெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் "ஆண்டவனே' என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார்.

அப்போது இறைவன் தோன்றி ""ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்'' என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் "ஆண்டவன் கோயில்' எனப்பட்டது.

கோவில் அமைப்பு:

இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.  ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே கோவிலின் தீர்த்தம் - திரிசூல கங்கை கோயிலின் வலப்புறம் உள்ளது.

கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே கோடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து அநேக தூணகளுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது.

உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார்.

கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.


சிறப்புக்கள் :

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.



போன்:  97519 23723

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்


இறைவி சொர்ணாம்பிகையை வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.