பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், திருக்கண்டியூர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன், சூரியன், சதாசபர் என்ற மகரிஷி,
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 12வது தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 75 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சூரியன் வழிபட்ட தலம்.

இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது.

பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது. சாப விமோசனம் பெறக் காரணமாக இருந்த ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் எழுந்தருளி இருக்கும் திவ்யதேச ஆலயம் சிவன் கோவிலுக்கு மிக அருகில் இருக்கிறது.

இத்தலத்தில் சூரிய பூஜையும் நடைபெறுகின்றது. வருடந்தோறும் மாசி மாதம் மாலையில் சூரிய ஓளி சுயம்பு மூர்த்தி திருமேனியின் மீது படுகின்றது.

முருகப்பெருமானே இங்கு துவாரபாலர்கள் இடத்தில் ஞானகுரு, ஸ்கந்த குருவாக இருக்கிறார்.

திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகும்.
இத்தலத்தில் முருகப் பெருமான் வலது கையில் ஜபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு "ஞான சக்தீதராகக்" காட்சி தருகின்றார். இவரை ஞானஸ்கந்தர் என்று அழைக்கின்றனர்.

தல வரலாறு:

சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் காளஹஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளஹஸ்தி நேரத்தில் செல்ல முடியாமற் போயிற்று, சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை விடவும் துணிந்தார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், எங்கும் நானே இருக்கிறேன் என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் இத்தலத்தில்தான் தனிக்கோயில்கள் உள்ளன. எனவே, இத்தலத்துக்குத் திருமூர்த்தி தலம் என்ற பெயரும் உண்டு.

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் ஆகிய 5 திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தான். எனவே, தானே படைப்புக் கடவுள் என செருக்குற்றான். அவன் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான், பைரவர் உருவம் கொண்டு அவரைப் பிரம்மாவின் மேல் ஏவி, அவரது ஐந்தாவது தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார். அந்தத் தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது.

தோஷம் நீங்க வேண்டி பைரவர் இத்தலத்துக்கு வந்தபோது, பிரம்மனின் தலை, கையைவிட்டு அகன்றது. அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. நான்முகனும் தனது ஆணவம் அகன்று, தன் மனைவியான சரஸ்வதியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.


பிரம்மா, படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, சிவன் பைரவர் வடிவம் எடுத்து பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்து, இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் தலை கொய்தவர் என்பதால் இவர், பிரம்மசிரகண்டீஸ்வரர் என்று பெயர் பெற்றார் என்று மற்றொரு வரலாறும் இருப்பதாக தெரிய வருகிறது..

திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து நந்திதேவருக்கு மாப்பிள்ளை விருந்து கொடுப்பர்.



கோவில் அமைப்பு:

மேற்கு நோக்கிய இக்கோவிலில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என உள்ளது. இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது.

மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள்.   வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் அடுத்து இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்களும் உள்ளனர்.  அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும், சூரியனை பார்த்தபடி உள்ளனர். சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கு வடபுறத்தில் சப்தஸ்தான தலங்களைக் குறிக்கும் 7 லிங்கங்கள், பஞ்சபூத தலங்களைக் குறிக்கும் 5 லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன.

இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர்.மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி காட்சி அளிக்கிறாள். பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக்கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறம், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாக  உள்ளது.

சிறப்புக்கள் :

பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், அழகு வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள்.

திருவிழா:

சித்திரை திருவாதிரையில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வைகாசியில் பதிமூன்று நாட்களுக்கு பெருவிழா நடைபெறுகின்றது. நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி

போன்:  -

குருக்கள் 9047688305

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.


சூரியன் வழிபட்ட தலம்.

அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது.

பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது.

முருகப்பெருமானே இங்கு துவாரபாலர்கள் இடத்தில் ஞானகுரு, ஸ்கந்த குருவாக இருக்கிறார்.

பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், அழகு வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார்.