திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருச்சி - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி
தல மரம் : வெண்நாவல்
தீர்த்தம் : காவிரி,இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்
வழிபட்டோர் : அம்பிகை, சிலந்தி,யானை, சம்பந்தர்,அப்பர் , சுந்தரர்

தேவாரப் பாடல்கள் :

1. சம்பந்தர் -
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே

2. அப்பர் -
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

3. சுந்தரர் -

தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்


தல வரலாறு:

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும். வ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருந்தகையார் ``செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே`` என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்) இறைவி திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி.

இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம் தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

கோச்செங்கட் சோழன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை 'ரெக்தாக்ஷ சோல' என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

சிறப்புக்கள் :

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அகிலாண்ட நாயகி ஆதியில் மிக உக்கிரமான சக்தியாக விளங்கினாள். அதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலிருந்து வழிபட்டு வந்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் இரு ஸ்ரீ சக்கரங்கள் செய்து, இவற்றில் அம்பிகையின் தெய்வீக சக்தி முழுவதும் வந்து குடிபுகும்படி வேண்டினார்; அம்பிகையும் அவ்வாறே செய்தார். அந்த ஸ்ரீ சக்கரங்கள் இரண்டும் அம்பிகையின் இரு காதுகளிலும் தோடுகளாக ஒளிவீசுகின்றன.

நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.

ஆனை வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.


போன்:  91-431- 2230 257.

அமைவிடம் மாநிலம் :
திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியாகும்.இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும்.

மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கோச்செங்கட் சோழன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை.


இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது.