மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சுந்தரேஸ்வரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்),
இறைவியார் திருப்பெயர் : மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள்),
தல மரம் :கடம்ப மரம்,
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி,
வழிபட்டோர் :திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தை,
தேவாரப் பாடல்கள் :திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:


சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று.

இது ஐம்பெரும் சபைகளில் ரஜத [வெள்ளி] சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும்.

இறைவன் சுந்தரேஸ்வரர் இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

2500 வருடம் பழமையான தலம்.

2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது. மதுரை நகரானது திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மதுரை திருபாற்கடலை கடைந்த போது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுததாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.

நான்மாடக்கூடல் மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.

ஆலவாய் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து நக்கீரருடன் வாதிட்ட தலம். நக்கீரர் தன்னுடன் வாதாடுவது இறைவன் என்று தெரிந்தும் "நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட தலம்.

இத்தலத்தில் தான் முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றியதும், , திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் நிகழ்ந்தது.

திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.

சிவனின் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலம்.

சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.

வருடம் முழுவதும் எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.

பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.

இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.

விருத்திராசூரனை கொன்றமையால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
மதுரை மாநகரத்திற்கு அடையாளமாகவும் அழகு சேர்ப்பதாகவும் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு இந்திரன் தன்னுடைய பாவத்தினை தீர்த்திக் கொண்டான். அதனால் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தளத்தின் அம்பாள் மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்த கருவறை விமானத்தை தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால் மீனாட்சி என்று பெயர் பெற்றார். தன்னுடைய முட்டைகளை மீன் பார்வையாலேயே தன்மயமாக்குவது போல பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில் கிளியும் இடம்பெற்றள்ளது. பக்தர்களின் கோரிக்கையை அம்பிகைக்கு நினைவூட்ட திரும்ப திரும்ப கிளி சொல்லிக் கொண்டிருப்பத நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாபவிமோசனத்திற்காக இத்தலத்தினை தேடி வந்தபோது கிளிகளே சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.

மீனாட்சிக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன. மீனாட்சியை அங்கயற்கண்ணி என தமிழில் அழைக்கின்றனர். இவரை தடாதகை பிராட்டி என்றும் அழைப்பதுண்டு. இவர் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை அலங்காரம் செய்த பிறகே பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன்பின்பே மூலவரான சிவபெருமானுக்கு பூசைகள் செய்யப்படும். இதற்கு மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து எப்போதுமே தன்னுடைய கணவனுக்கு தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால் கணவரை எழுப்பும் முன்பே மனைவியான அம்பிகை அபிசேகத்தினை முடித்து தயாராகிறாள். இதனால் காலையில் முதல் பூசை மீனாட்சிக்கு செய்யப்படுகிறது. ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான். அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள். அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள். மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள்.

இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர்.

கால் மாறி ஆடிய ருணை:
மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர். தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர்.

பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது. பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.

“”பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

சிவன் பாதம்:
சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம். பெரிய மூர்த்தி: பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும்
இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.

சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.


முக்குறுணி விநாயகர்: தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே நாம் காண்பது முக்குறுணி விநாயகர் சந்நிதி. கி.பி. 1623-1659 வரை மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது, மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்து இங்கே கி.பி. 1645ல் பிரதிஷ்டை செய்தார். ஒரே கல்லினால் ஆன இவ்விநாயகரின் உயரம் 7 அடி. ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)


போன்:

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு : மதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். கோவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 Km தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்


மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இது ஐம்பெரும் சபைகளில் ரஜத [வெள்ளி] சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும்.

2500 வருடம் பழமையான தலம்.

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து நக்கீரருடன் வாதிட்ட தலம். நக்கீரர் தன்னுடன் வாதாடுவது இறைவன் என்று தெரிந்தும் "நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட தலம்.