சிவானந்தேசுவரர் திருக்கோயில் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சிவானந்தேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை
தல மரம் : வன்னி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன், உமாதேவி, முருகன்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,


தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 127 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரணவ மந்திரத்திறகு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக் கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்து விட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க தனது மாமனான மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார்.

அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.

எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சகதியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது
. இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு தண்டாயுதபாணி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவர் சின்முத்திரையுடன் கண்மூடி நின்ற நிலையில் தியான கோலத்தில், தலையில் குடுமியுடன் நிற்கிறார். காது நீளமாக வளர்ந்துள்ளது. சுவாமி கோபுர விமானத்தில் அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியும், வீணா தெட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.

இரட்டை விநாயகர்: கோயிலின் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து இத்தலத்திற்கு தவமிருக்க வந்தபோது, பாதுகாப்பிற்காக விநாயகர் இரட்டை வடிவெடுத்து வந்ததாகவும், பின் இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுவர்.

கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. எதிரில் மங்கள தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையில் கோவிலை ஒட்டி இரட்டை விநாயகர் சந்நிதகள் உள்ளன. குக விநாயகர், சாட்சி விநாயகர் என்று பெயர்கள். அவர்களை வழிபட்டு ஆலயத்தினுள் சென்று இறைவனை வணங்கலாம்.

இராஜ கோபுரம் வழியே உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஒரே பிரகாரமுள்ளது. கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன. இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சின் முத்திரையுடன் தியான நிலையிலுள்ள தண்டபாணி பார்த்துப் பரவசம் அடைய வேண்டிய திருமேனி.

ஆலயத்திலுள்ள பிட்சாடனர் உருவச்சிலையும் மிகச் சிறப்பானது. அம்பாள் மங்களாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவ்வாலயத்தின் தலமரம் வன்னி. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன. செங்கற்கோயிலாக இருந்த இக்கோயில் கரிகாற்சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்று இத்தல கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தலத்தில் பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

சிறப்புக்கள் :

வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

 

போன்:  94436 50826

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ளது.



இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர்.


வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.