அபிமுக்தீஸ்வரர் கோவில் - திருப்பெருவேளூர் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : அபிமுக்தீஸ்வரர், பிரியாதநாதர், பிரியாஈஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஏலவார்குழலி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : சரவணப்பொய்கை
வழிபட்டோர் : கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர்
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர்


தல வரலாறு:

திருப்பெருவேளூர் (தற்போது மணக்கால் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகிறது)

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 155 வது தேவாரத்தலம் ஆகும்.

தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் வைகுந்த நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் பல உள்ளன. அவற்றில் பெருவேளூர் தலமும் ஒன்றாகும். முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் பெருவேளூர் எனப்பட்டது.

ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,""இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்,''என வேண்டினாள்.

கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,""கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,''என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் தான் "லலிதா திரிசதை' பாடப்பட்டது.

வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.மேலும் இந்த வெளிப் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லிங்கம் சரஸ்வதீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது.


கோவில் அமைப்பு:

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது பிரதான விநாயகர் சந்நிதி, அதையடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி, அடுத்து யோகசண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை உள்ளன. கிழக்கு வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் மாடக்கோவிலுக்குச் செல்லும் படிகள் உள்ளன. மாடக் கோவிலில் உள்ளே இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கள் :

திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.


இத்தலத்தில் தான் "லலிதா திரிசதை' பாடப்பட்டது.


போன்:   -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை, வடகண்டம் ஊர்களைத் தாண்டி மணக்கால் அய்யம்பேட்டை என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மி சென்றால் இத்தலம் அடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.