noscript-img

நெல்லையப்பர் திருக்கோவில் - தல வரலாறு

 

 

படங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.

இறைவர் திருப்பெயர் :நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் )
இறைவியார் திருப்பெயர் : காந்திமதி, வடிவுடையம்மை
தல மரம் : மூங்கில்
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
வழிபட்டோர் : மகாவிஷ்ணு,வேதபட்டர்,நின்றசீர் நெடுமாறன்
தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:

இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.

சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது.

லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே.

கோவில் தோன்றிய வரலாறு

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார. ஒருநாள் வேதபட்டர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.


தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் பெரிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இவருக்கு மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்கள் உள்ளன. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு "சக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு.

இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன. இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. வருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.


வெண்ணிற ஆடை அம்பிகை:
காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.

தனித்தனி பூஜை:
நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

காந்திமதி சீர் :
பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.

பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.

அன்னம் பரிமாறும் அம்பிகை :

இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.

திருமால் மார்பில் லிங்கம்:
மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூ ஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். இவரது கையில் தாரை வார்த்துக்கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கி றது.

அம்பிகைக்கு பிரதோஷம்:
பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

தன்னில் நீராடும் தாமிரபரணி :

இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

மார்கழி பூஜை இல்லாத கோயில்:
தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இங்கு கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் துவங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

மான் வாகன துர்க்கை:
இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை "மஞ்சன வடிவாம்பிகை' என்பர். இவளையும் துர்க்கையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.

புதனின் மாறுபட்ட திசை:
பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.

முக்குறுணி விநாயகர்:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

கோவில் அமைப்பு:

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.

மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.

மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.

கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.

நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.

சிறப்புக்கள் :

இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில், 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர் என்பதும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை.

கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.

போன்:  94421 67104

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மி. தொலைவில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ளது.



நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார்


லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.

தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே.

இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.

மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது.

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.