பாடலீஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்,
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி,
தல மரம் : ஆதிபாதிரி,
தீர்த்தம் : கடல்(பிரம்ம தீர்த்தம்), சிவகர தீர்த்தம்(கோயில் குளம்), பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணை நதி,திசைபாலர் தீர்த்தங்கள்.
வழிபட்டோர் : அருணகிரிநாதர், புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர்,
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1.


தல வரலாறு:

காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.

பாடலீஸ்வரர் என்றழைக்கப்படும் சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 18வது தலம், கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது.

பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் அப்பர் என்ற சைவத்துறவியின் சைவம் தொடர்பான கருத்துகளைக் காணலாம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அப்பரை கல்லைக்கட்டி கடலில் போட்ட போதும் அவர் சிவபெருமானின் திருநாமத்தை உச்சரித்தவண்ணமாக கடலில் நீந்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள். ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.

திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

கரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். அப் பதிகத்தில் "தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே" என்று குறிப்பிடுவதால் இத்தல இறைவன் "தோன்றாத்துணை நாதர்" என்னும் பெயரும் பெற்றார்.



சிறப்புக்கள் :

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.

மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்காக பிரார்த்தனை நடைபெறும் சிவத்தலமாக  கடலூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக  கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது.


போன்:  +91-4142- 236 728, 98949 27573, 94428 32181

அமைவிடம் மாநிலம் :

திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.


அப்பர் சுவாமிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" என நமசிவாயப் பதிகம் பாடிய தலம்

கணவன் மனைவி ஒற்றுமைக்காக பிரார்த்தனை நடைபெறும்.

காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது