பசுபதீஸ்வரர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : பசுபதீஸ்வரர், பசுபதீசுவரர், பசுபதி நாதர்,
இறைவியார் திருப்பெயர் : சாந்த நாயகி்,
தல மரம் : வில்வம், இலவம்,
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி்,
வழிபட்டோர் :காமதேனு,
தேவாரப் பாடல்கள் :திருநாவுக்கரசர்,

தல வரலாறு:

இத்திருத்தலம் காமதேனு வழிபட்ட தலம்.

உமா தேவியார் பசுவடி வாய் பால் சுரந்து பூசித்த தலம்.

ஜுரம் (காய்ச்சல்) நோயால் அவதியுறுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீர் அபிஷேகம் செய்து புழுங்கல் அரிசி நிவேதனம் செய்தால் ஜுரம் நீங்கும் என்பது ஐதீகம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர்.

ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். பகவானால் காமதேனுவாக சாபம் பெற்ற உமாதேவி இத்தலத்தில் பூமியை கொம்பினால் கிளறிக்கொண்டே வந்தபோது இறைவனின் தலையில் கொம்பு பட்டு இரத்தம் வடிந்தது. பின் உமாதேவி ஈசனின் சிவலிங்கத் திருமேனியைப் பாலால் அபிஷேகம் செய்து காயத்தை ஆறச்செய்து சாப விமோசனம் பெற்றாள். இதன் காரணமாக இன்றும் லிங்கத்திருமேனியில் கோட்டின் வடு காணப்படுகிறது. சாந்தநாயகி சமேத பசுபதீஸ்வரர் சிவலிங்க மூர்த்தியாக எழுந்தருளி தம்மை அண்டிவருவோர்க்கு அருள் புரிந்து காக்கின்றார். பிரகாரத்தில் விநாயகர், முருகர், கஜலட்சுமி, நவக்கிரகம், சூரியன், ஆபத்சகாய மகரிஷி முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள வௌவால் நெத்தி மண்டபத்தில் ஆப்தசகாய மகரிஷி உருவமும் ஒருபுறத்தில் மூன்று திருவடிகளுடன் ஜவரஹரேசன் உருவமும் உள்ளது.

அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள். ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுவாள். ஸ்ரீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி (மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. ஆனால், இவள் வழிபாட்டுக்கு உரியவள். சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் அருள்பாலிக்கிறாள்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோயில். இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து 2-ம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். கருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன. சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன.


போன்:  +91 - 4366 - 228 033.

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி நிறுத்தம்"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இன்றும் லிங்கத்திருமேனியில் பசு கொம்பு பட்ட வடு காணப்படுகிறது.

வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள்.

முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர்.