அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : அகத்தீசுவரர்,
இறைவியார் திருப்பெயர் : பாகம்பிரியாள், மங்கைநாயகி அம்மை, சௌந்தரநாயகி,
தல மரம் : வன்னி ,
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்,
வழிபட்டோர் : அகத்தியர் ,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்
.

“ வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!"


தல வரலாறு:

அகத்தியர் இறைவனின் திருமணக்கோலத்தைக் காண தவம் செய்த பதி.

இது சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் 126 ஆவது தலம். கோயில் முப்பது ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. திருக்கயிலையில் வீற்றிருக்கும் அருட்கடலாகிய சிவபெருமானது திருமணக்கோலக் காட்சியைக் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவஞ்செய்த பதியாதலின் அகத்தியான்பள்ளி என்னும் பெயர் பெற்றது்.

கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.

மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு ஒரு தோரண வாயிலும் அதையடுத்து ஒரு 3 நிலை இராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.

இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இத்தல இறைவனை எமதர்மன் வழிபட்டுள்ளான். தல விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்புறம் உள்ள அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னிதீர்த்தம் ( அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.

சிவபெருமானின் திருமணக் கோலத்தை, அண்மையிலுள்ள திருமறைக்காட்டில் காட்டக், கண்டு வணங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் இயற்றும் பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் தமக்குப் புதல்வராகப் பெறுதற்குத் தவம் இயற்றி அவ்வாறே பெற்றது. எமதருமராசன் சீவன்முத்தி பெற்றது.

கோயிலில்,சோழமன்னரில் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரது இரண்டாம் ஆட்சியாண்டில் (29-1-1218) பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் பிற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவரின் ஐந்து, முப்பத்தொன்று இவ்வாட்சியாண்டுகளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும், மாறவர்மன், திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகள் நந்தா விளக்குகளுக்கும் நித்திய வழி பாட்டிற்கும் நிலங்கள் அளிக்கப்பெற்ற செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இராஜராஜன் ஒரு விளக்கிற்காக 1,500 காசுகளும், மாறவர்மன் குலசேகரன் ஐந்தாமாண்டில் பொன் தானமும், முப்பத்தொன்றாமாண்டில் விழா நடத்த நிலதானமும் அளித்தனன்.


போன்:  +91-4369 - 250 012

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


அகத்தியர் பூசித்தது.

இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமைவாய்ந்தது.

சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது.

அகத்தியர் இறைவனது திருமணக்கோலக் காட்சியைக் காணும் பொருட்டு தவஞ்செய்த பதி.