ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில் - தல வரலாறு

படங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்,
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை,
தல மரம் :பலா,
தீர்த்தம் : சசங்கு தீர்த்தம்,
வழிபட்டோர் : கபில முனிவர்,
தேவாரப் பாடல்கள் :அப்பர் - தொண்டர்க்குத் தூநெறியாய்,

தல வரலாறு:


முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடிய தலம்.

சரஸ்வதி தேவிக்கு இறைவர் சோதிர்லிங்கமாகக் காட்சி வழங்கி அருள்பாளித்த திருத்தலம்.

கோயிலின் முன்புள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிகையாக உள்ளது.

தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களுக்கு, சிவபெருமானைக் காட்டிலும் தவத்தில் சிறந்த தாங்களே சிறப்பானவர்கள் என்ற செருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிவபெருமானை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினர். பின்னர் சிவபெருமானின் மீது முயலகன் என்ற அசுரனை ஏவினர். ஆனால் ஈசனோ, அந்த அசுரனை தனது பாதத்தின் கீழ் போட்டு அழுத்தி, அவன் மீது ஏறி நின்று நடனமாடினார். அந்த ஈசனே இங்கு அருள்பாலிப்பதால், இத்தல இறைவன் நடனேஸ்வரர் என்றும், ஆடவல்லநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் சன்னிதி முன்பாக உள்ள மகா மண்டபத்தில், முயலகன் மீது சிவன் காலூன்றி ஆடும் நடராஜ சபை இதனை உறுதி செய்கிறது. இசை, நடனத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், இங்கு வந்து நடராஜனை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சுவாமி சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வலது புறத்தில் தனிச் சன்னிதியில் விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் பிரசன்ன விநாயகர், அதையடுத்து வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.வடக்குப் பகுதிக்கு வலமாக வந்தால், அங்கே 10 கரங்களுடன் தசபுஜ காளிதேவியின் சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த காளிதேவியை வழிபட்டுதான் போரில் பாண்டிய மன்னன் வென்றதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகு காலத்தில், இந்த காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தல மூலவர் விமானத்தின் தோற்றமே வித்தியாசமாக காட்சி தருகிறது. இதில் இருந்து ஒரு தை அமாவாசை நாளில், அப்பருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. அந்த காட்சியும் விமானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விமான மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

தேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் "தலையாலங்கானம்" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான். இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி ஆனந்தச் சூழலில் அமைதியாக அமைந்துள்ளது.

உயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திரு மடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்குண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது. செங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும்.

இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தல விருட்சமான பலா மரத்தைக் கண்டு வணங்கலாம். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் ஸ்வாமி மீது விழுகின்றன.


போன்: +91- 4366 - 269 235, +91- 94435 00235.

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மி. தொலைவிலும் திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்


அப்பருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார்.


காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இசை, நடனத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், இங்கு வந்து நடராஜனை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.