திருராமேஸ்வரம் - தல வரலாறு - பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

பிதுர்தோஷம் போக்கும் மன்னார்குடி ராமநாதசுவாமி.

தல வரலாறு:

கும்பகர்ணன் தனது அண்ணன் ராவணன் வேண்டுகோளினை ஏற்று ராமரை எதிர்த்து போர் செய்ய போர்க்களம் வருகிறான். ராமர் தொடுத்த பாணங்களால் கும்பகர்ணன் தனது இரண்டு கரங்களையும் இழக்கிறான். அப்போது ராமனைப் பார்த்து கும்பகர்ணன், ""ஸ்ரீராமா, நாங்கள் எல்லாரும் போரில் அழிந்துபோன பிறகு எங்கள் மூதாதையருக்கு பிதுர்கடன் கொடுக்க யாரும் இல்லாமல் போய்விடுவார்கள். எனவே எங்கள் சகோதரன் விபீஷணனை கொன்று விடாதே. எங்கள் மூதாதையருக்கு பிதுர்கடன் கொடுக்க, அவன் ஒருவனாவது இருக்கட்டும்'' என்று வேண்டினான். அதேபோன்று மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் காட்டில் வனவாசம் செய்தபோது, ஓரிடத்தில் தண்ணீர் தாகத்தால் திரௌபதி துடித்தாள். அப்போது தருமர், நகுலனை எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா என பார்த்துவர அனுப்பினார். நகுலன் கொஞ்சதூரத்தில் ஒரு தடாகத்தை பார்த்து பளிங்கு போன்று காணப்பட்ட அந்த தண்ணீரை எடுத்துவர முயன்றான். அச்சமயம், ஓர் அசரீரி குரல் கேட்டது. "எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் நீ இறந்து விடுவாய்'' என்றது. அதைப் பொருட்படுத்தாமல் நகுலனும் அதன்பின் ஒருவர் ஒருவராக வந்த சகாதேவன் அர்ச்சுனன், பீமன், ஆகியோர் கேள்விக்கு பதில் சொல்லாமல் குளத்து நீரை குடித்து இறந்து கிடந்தனர். இறுதியாக வந்த தருமர் அந்த கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறினார். அதற்கு அந்த அசரீரி மகிழ்ச்சியடைந்து, ""இங்கு இறந்து கிடக்கும் உனது சகோதரர்களில் ஒருவரை என்னால் திரும்ப உயிர்ப்பித்து தர முடியும். நீ யாரை கேட்கிறாய்'' எனக் கேட்டது. அதற்கு தருமர், நகுலனை மனமுவந்து நீ எனக்கு திருப்பி கொடுப்பாயாக'' என்றார்.

ஆச்சரியத்துடன் அசரீரி "பீமனும் அர்ச்சுனனும் போர்க்களத்தில் யாராலும் வெல்ல முடியாத தலை சிறந்த போர்வீரர்கள், அவர்களை புறந்தள்ளிவிட்டு, வேறொரு தாயின் மகனான நகுலனை ஏன் உயிர் பிழைக்க தேர்ந்தெடுத்தாய்'' என்றது. அதற்கு தருமர், "போர்புரிந்து வெற்றியடைவது மட்டுமே என்து வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் இல்லை. பக்திபூர்வமாக என் பெற்றோர்களுக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும். எனது தாயாருக்கு பிதுர்கடன் செய்ய நான் இருக்கிறேன். அதுபோல் நகுலனின் தாயாருக்கு பிதுர்கடன் செய்யவே நகுலனை உயிர்ப்பிக்க கேட்டேன். நகுலனின் தாயாருக்கு பிதுர்கடன் செய்ய மகனில்லாத பாவத்தை நான் ஏற்படுத்துவது தர்மம் ஆகாது'' என்றார். "பரந்த மனப்பான்மை உடைய உன்னை போன்றவரை காண்பது அரிதிலும் அரிது. எனவே உனது நான்கு சகோதரர்களையும் உயிர்ப்பித்து உன்னுடன் அனுப்புகிறேன் என்று கூறியது. ஸ்ரீராமர் இலங்கையில் அசுரர்களை அழித்துவிட்டு திரும்பும்போது தனது தந்தைக்கு திதி செய்யாமல் விடுபட்ட பிதுர்கடன் தோஷம் நீங்கவும் பலரை போரில் கொன்றதால் ஏற்பட்ட கொலை பாவமான பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் திருராமேஸ்வரம் என்கிற திருத்தலத்தில் ஸ்ரீ ராமபிரான் ஐந்து நாள்கள் சிவபூஜை செய்தார். தங்கிய நாள்களில் அமாவாசை திதி வந்தபடியால், நித்யகர்ம அனுஷ்டானங்கள் செய்ய நீர் வேண்டி ஸ்ரீராமன் தனது கோதண்டத்தில் பிரம்மாஸ்திரத்தை பூட்டி பூமியில் பாய்ச்ச ஊற்று கிளம்பி குளமாக நிரம்பியது. இதனால் ஏற்பட்ட குளம் பிரம்ம தீர்த்தம் எனவும் ஊற்று எடுத்த இடத்தில் கோதண்டத்தினால் உண்டானதால் அந்த கிணறு கோதண்ட தீர்த்தம் எனவும் வழங்கப்பெற்றது. சீதை ராமனை பிரிந்து அசோகவனத்தில் தனித்திருந்த பாவத்தைப் போக்க இந்த தலத்தில் சிவபூஜை செய்ததினால் சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சி தந்திருளினார். ஸ்ரீ ராமபிரான் சிவபெருமானிடம் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிதுர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்றார். குறிப்பாக அமாவாசை நாள்களில் (ஆடி, தை விசேஷம்) பிதுர் தர்ப்பணம் செய்ய திருராமேஸ்வரம் மிகவும் சிறந்ததாகும்.

இத்திருக்கோயில் ராஜகோபுரம், உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம், மகாமண்டபம், வசந்த மண்டபத்துடன் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீ ராமநாத சுவாமி, ஸ்ரீ மங்களநாயகி அம்பாள், நடராஜர், சீதை, என தனித்தனி சந்நிதிகள் கொண்டு மேற்குப்புறம் வாயில்படி அமைக்கப்பெற்றுள்ளது. திருராமேஸ்வரம் ஸ்ரீ மங்களநாயகி சமேத ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை அன்று கோயில் குளத்தில் நீராடி மூதாதையருக்கு பிதுர்கடன் கொடுப்பதால் அமாவாசை வழிபாட்டுக்குரிய மிக முக்கிய தலமாக விளங்குகிறது. மிகவும் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சோழர் பரம்பரையில் வந்த ராஜசேகர வர்மனால் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இத்தலம், சூரிய தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. ஸ்ரீ ராமர், சீதை, சூரிய பகவான் ஆகியோர் வழிபட்ட இந்த புண்ணிய தலத்தில் செய்யப்படும் தர்ப்பண பூஜைக்கு பல்லாயிரம் மடங்கு பலன் உண்டு என்பர். தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.

சிறப்புக்கள் :

ஸ்ரீ ராமபிரான் சிவபெருமானிடம் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிதுர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்றார்

குறிப்பாக அமாவாசை நாள்களில் (ஆடி, தை விசேஷம்) பிதுர் தர்ப்பணம் செய்ய திருராமேஸ்வரம் மிகவும் சிறந்ததாகும்.போன்:

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் தட்டாங்கோயில் என்ற ஊரிலிருந்து வடக்கே 4 1/2 கி.மீ. தொலைவில் இக்கோயிலைச் சென்றடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


ஸ்ரீ ராமபிரான் சிவபெருமானிடம் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிதுர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்றார்

குறிப்பாக அமாவாசை நாள்களில் (ஆடி, தை விசேஷம்) பிதுர் தர்ப்பணம் செய்ய திருராமேஸ்வரம் மிகவும் சிறந்ததாகும்.

பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.