இறைவர் திருப்பெயர் : பலாசவனநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி
தல மரம் : பலாமரம்
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
வழிபட்டோர் : மகாவிஷ்ணு, ஆபஸ்தம்ப ரிஷி
தேவாரப் பாடல்கள் : அப்பர்
தல வரலாறு:
நாலூர் ஒரு தேவார வைப்புத் தலம்.
நாலூர் பலாசவனநாதர் கோவில் அப்பர் பெருமான் வைப்புத் தலமாக தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ள தலமாகும்.
கோவில் அமைப்பு:
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளின் படி இத்தல இறைவன் சம்பரீசுவரத்து மகாதேவர், சம்பரீசுவரத்துப் பெருமானடிகள் என்று குறிப்படப்பட்டுள்ளார். எனினும் தற்போது பலாசவனநாதர் என்றே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். கிழக்கு திசையில் கோபுரமற்ற ஒரு சிறிய கம்பிக் கதவுடன் ஆலயம் அமைந்துள்ளது. வாயிலுள் நுழைந்ததும் திறந்தவெளியும், அதையடுத்து 9 படிகளை ஏறி மாடக்கோவில் அமைப்புள்ள ஆலயத்திற்குள் செல்லலாம். படிகள் ஏறி மேலே சென்றவுடன் தெற்குப் பிராகாரத்திலுள்ள வாயில் வழியே முன்மண்டபத்தை அடையலாம். இங்கு பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. முன் மண்டபம் கடந்து முகமண்டப வாயிலருகே தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் உள்ளனர். அர்ந்த மண்டபம் கடந்து கருவறையில் இறைவன் பலாசவனநாதர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி சதுர ஆவுடையாருடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் கருவறை விமானம் கஜபிரஷ்ட விமானம் என்று கூறப்படும் தூங்கானை மாடமாக அமைந்துள்ளது. கஜபிரஷ்ட விமானம் என்பதற்கேற்ப இதன் கிழக்குப் பகுதியில் நிற்கும் யானையின் முன்தோற்றம் இருப்பதைக் காணலாம்.
வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இந்த வெளிப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதியும் அமையப் பெற்றுள்ளன.
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் பலாசவனேஸ்வரர் சன்னதியும், அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது
சிறப்புக்கள் :
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
போன்: -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - திருச்சேறை - குடவாசல் சாலை வழித்தடத்தில் திருச்சேறைக்கு அடுத்து வரும் ஊர் நாலூர்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணிவரைநிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved