மூலவர் : ராமநாதசுவாமி, இராம நதிஸ்வரர்
உற்சவர் : நந்தியுடன் சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : கருவார்குழலி அம்மை, சூலிகாம்பாள், சரிவார்குழலி
தல விருட்சம் : மகிழம், செண்பகம்
தீர்த்தம் : ராம தீர்த்தம்
வழிபட்டோர் : அகத்தியர், ராமர்,
தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.
இராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் இங்கு சிவ வழிபாடு செய்தார். தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம்.
இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு சௌரிராசப் பெருமாள் கோயில் உள்ளது.
தல வரலாறு:
இராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தார், அயோத்தி திரும்பும் வழியில் இவ்வழியே... ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்தார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் நந்தியைத் தடுத்து காட்சி தந்தார், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் வரலாறு. பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதசுவாமி" என்று பெயர்.
இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.
இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். வனத்திற்கு மன்னர் வேட்டையாடச் சென்ற போது 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் சிவன் அவர்களை மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர்.
இந்த அம்பிகையர் நால்வருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொது பெயர் உள்ளது. இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார் வெளியில் சென்றுவிட்டாள்,அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். இதனாலேயே நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயர் ஏற்பட்டது. "சூல்' என்றால் "கரு' என்று பொருள். "கரு காத்த அம்பிகை' என்றும் இவளுக்கு பெயர் உண்டு. திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர், திருமருகல் இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு:
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயில் மேல் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பத்தைக் காணலாம்.
கருவறையிலுள்ள் மூலவர் சிவலிங்கத் திருமேனி பெரியது. உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆலயத்திற்கு எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலீபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். இங்கு கொடிமரமில்லை.
வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை,கணபதி, சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார், இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். மகாலட்சுமி,சண்டிகேஸ்வரர், சரிவார்குழலி அம்மன், காலபைரவர், சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன
தீபாராதனையின்போது மூலவர் லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்புக்கள் :
செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும்,
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
திருவிழா:
மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி.
போன்: -
94431 13025
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மி. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது
© 2017 easanaithedi.in. All rights reserved