இறைவர் திருப்பெயர் : பாம்பு புரேஸ்வரர், பாம்புர நாதர், சேஷபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பிரமராம்பிகை, வண்டமர் பூங்குழலியம்மை
தல மரம் : வன்னி
தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி , அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன்
தேவாரப் பாடல்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.
ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால் வாயுபகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டி போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்தி நிறுத்தியது.
இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை தடுத்து நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது. பின்னர் திருப்பாம்புரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது.
சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.
கோவில் அமைப்பு:
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன.
மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.
திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
சிறப்புக்கள் :
பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.
சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும்.
போன்: -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved