மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் :மரகதாசலேசுவரர், மரகதாசலர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர்
இறைவியார் திருப்பெயர் : மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி
தல மரம் : - புளியமரம்
தீர்த்தம் : -  -
வழிபட்டோர் : அம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்),சுந்தரர், பிருகு முனிவர்
தேவாரப் பாடல்கள் :-திருஞானசம்பந்தர்

இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை.

அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும்.

மலைமேல் கோயில் 560 படிகள்.

தல வரலாறு:

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 63 வது தேவாரத்தலம் ஆகும்.

சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருஈங்கோய்மலை தலத்தில் உள்ள மரகதாசலேசுவரரை மாலையில் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.

காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பந்துறை), நண்பகலில் வாட்போக்கியையும் வழிபட வேண்டும். இவ்வாறு ஒரே நாளில் தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவை எனினும், கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார்.

ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச்செய்தார். ஆதிசேஷன் மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார்.  மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். இவருக்கு "திரணத்ஜோதீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.

சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன.

அகத்தியர் ஈ வழிபாடு: தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சன்னதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார். அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், "திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு "ஈங்கோய்நாதர்' என்றும் பெயர் உண்டு.


சுந்தரர்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார்.

சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் "எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,' என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.


தலவிருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை.


கோவில் அமைப்பு:
சுமார் 500 படிகள் ஏறினால் கோவில் வந்தடையலாம். மலை ஏறும் படிகள் சுமாராக அமைந்திருப்பதாலும், வழியில் இளைப்பாற ஒரேஒரு மண்டபத்தைத் தவிர வேறு வசதி இல்லாததாலும், நிதானமாகத் தான் மலையேற வேண்டும். கல் விளக்குத் தூண் இங்கு காணப்படுகிறது. போக முனிவர் சந்நிதியும் அடிவாரத்திலுள்ளது.

கோயிலுள் நுழையும் போது தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. வலமாக வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி அமைப்பைக் காண முடிகிறது. உள் பிரகாரத்தில் விநாயகர், முருகர், நவக்கிரகம், நால்வர் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில் விமானங்கள், கொடிமரங்கள் உள்ளன. பால தண்டாயுதபாணி சந்நிதி தனியே உள்ளது.

மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின் முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் இலிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.

சிறப்புக்கள் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்:  - 94439 - 50031

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருச்சிக்கு - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.


கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம்.

திருஈங்கோய்மலை தலத்தில் உள்ள மரகதாசலேசுவரரை மாலையில் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.

இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது.

மலைமேல் கோயில் 560 படிகள்.