சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சத்யகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : சகிதேவியம்மை
தல மரம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு, சத்திய புஷ்கரிணி
வழிபட்டோர் : சண்டிகேஸ்வரர், அருணகிரிநாதர், வாயுதேவன், ஆதிசேஷன்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,


தல வரலாறு:

திருசேய்ஞலூர் (இத்தலம் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்குகிறது)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 41 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

எல்லா சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார்.

மகா மண்டபத்தில் தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது.

இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவன் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றான். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தான்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தன் காலால் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தான். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, "என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்", என்று கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்" ஆக்கினார். விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம் சேய்ஞலூரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவரே.

இத்தலத்தில் இவர் வேறெங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். அருகிலுள்ள திருவாய்ப்பாடி இவரது முக்தி பெற்ற தலமாக போற்றப்படுகிறது. சிவன் காட்சி கொடுத்ததால், சண்டேஸ்வரரே பிறை, சடை, குண்டலம், கங்கையுடன் காட்சி தருகிறார். சிபிச்சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று.வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

ஒரு காலத்தில் வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரீட்சை ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையை இறுகிப்பிடிக்க, வாயுதேவன் பெருங்காற்றால் மலையை அசைக்க முயன்றான். இதில் ஒரு சிறு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இதனால் இத்தலம் சத்தியகிரி எனப்பட்டது. முருகக்கடவுள் பூஜித்ததால் சேய்ஞலூர் என்ற பெயரும் உண்டு. 

முருகன் வழிபட்ட தலம்: பிரணவமந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரமனை சிறையிலடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும்படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால் தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சிஷ்யனாகவும், மகன் குருவாகவும் இருக்கும்படியான விபரீதம் ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதை போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷம் நீங்கினார். ஒரு முறை முருகன் சூரபத்மனை அழிக்க வரும் போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்து உருத்திரபாசுபதப்படையை பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும், முருகன் வழிபட்டதால் சேய்(முருகன்)நல் ஊர் - சேய்ஞலூர் என்றும் பெயர் பெற்றது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது.


கோவில் அமைப்பு:

கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலமாதலால், கோயில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

கோயில் கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர்,

தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.

சிறப்புக்கள் :

சகலவிதமான தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார்.

மகா மண்டபத்தில் தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது.

போன்:  93459 82373

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரம் ஊரைத் தாண்டி சேங்கனூர் நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் ஒரு சிறிய சாலையில் (சாலையில் நுழைவு வாயில் உள்ளது) சுமார் 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார்.தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.