அருள்மிகு கோரக்க சித்தர் ஜீவ சமாதி திருக்கோயில், வடக்கு பொய்கை நல்லூர் - தல வரலாறு- பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

வழிபட்டோர் : கோரக்க சித்தர்

கோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவர், 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார்.

நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுனர்.

கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம் வடக்கு பொய்கை நல்லூர். கோரக்க சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.

கோரக்க சித்தரின் ஜீவ சமாதிக் கோயிலில் சமாதிக்கு நித்திய வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சதுரகிரி சென்று பல முனிவர்களுடன் சேர்ந்து கற்ப மூலிகைகளை உண்டு உடலை கல்ப தேகமாக மாற்றிக்கொண்டார்.

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி.

இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு,கோரக்கர், தான் இயற்றிய பதினாறு நூல்களையும் சுருக்கித் தொகுத்து, ‘சந்திரரேகை’ என்று ஒரு நூலை உருவாக்கினார்.


கோரக்கர்
இவரை வடநாட்டில் "நவநாத சித்தர்" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது.

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. கோரக்கர் கொல்லி மலைச்சாரலில் உள்ள சம்பல் பட்டியில் பிறந்தவர். இவர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் வசிஷ்ட மகிரிஷிக்கும் ஒரு குறவர்குடிப் பெண்ணிற்கும் மகனாகப் பிறந்தார்.தமிழ்நாட்டில் நாகபட்டின மாவட்டத்தில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற கிராமத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

மச்சமுனி சிவனிடமே ஞானம் பெற்ற மாமுனிவர். ஒருநாள் பிச்சையிட்ட ஒரு பெண், தனக்கு புத்திர பாக்யமளிக்க வேண்டினாள். அவளுக்கு முனிவர் விபூதி அளித்து உட்கொள்ளச் சொன்னார். அவள் அதை அடுத்த வீட்டுக்காரியிடம் கூற அவள் - முனிவர் வேஷக்காரன் அதை நம்பாதே! அடுப்பில் போட்டு எரித்துவிடு என்றாள். அப்பெண்ணும் அந்த விபூதியை எரியும் அடுப்பில் கொட்டிவிட்டாள். சில ஆண்டுகள் கழித்து அவள் வீட்டுக்கு வந்த மச்சமுனி, உன் மகன் எங்கே? என்று கேட்டார். அவள் நடந்ததைக் கூறி அடுப்பெரித்த சாம்பலை கொட்டிய கோவகத்து அடுப்பை காட்ட, மச்சமுனி சினமுற்றார்.

சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று என்று அழைக்க அந்த கோவகத்து சாம்பலுக்குள் இருந்து வளர்ந்த பிள்ளையாக கோரக்கர் வெளிப்பட்டார்.

வெளிப்பட்ட அச்சிறுவன் மச்சமுனியைத் தன் குருவாகக் கொண்டு அவருடன் சென்றுவிட்டார். மச்சமுனி பல தலங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவிகள் புரிந்துவிட்டுக் கடைசியில் மச்சமுனி திருப்பரங்குன்றம் சென்று சமாதி பூண்டார். இவர் சமாதி பூண்ட இடம் தான் ஆறுபடைவீடுகளில் ஒன்றாகக் திகழ்கிறது .

கோரக்கர் , மச்சமுனியின் சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையே தன் வாழ்வாக கொண்டார். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டாள். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் எனக்கு மேலும் வடை தேவை என்றார்.

கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தீர்ந்தாகிவிட்டது என்றாள். இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும் சுட்டுத்தாருங்கள் தாயே என்றார். ‘‘இயலாதப்பா...! எனக்கு முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ உன் கண்களை பிடுங்கியா தருவாய் என எகத்தாளமாய் கேட்டாள், அதற்கென்ன தந்தால் போச்சு என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி திகைத்தாள்.

அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடிய படி வந்து வடையைத் தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மூடியதன் காரணம் அறிய, கோரக்கா எனக்காக அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய் என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார்.

கோரக்கரின் சிவயோகத் தலயாத்திரையில் ஒருமுறை சதுரகிரி அடிவாரத்தில் உள்ள மகாலிங்க மலைக் குகையில் தவம் மேற்கொண்டார்.அந்தக் குகைக்கு அருகில் அவர் வழிபட்ட லிங்கமும் ஒரு நீரோடையும் உள்ளன. அந்த நீரோடை இன்றும் கோரக்கர் தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. கோரக்கர் குகைக்கு மேலே 4 கி.மீ. உயரத்தில் மகா லிங்கேஸ்வரர் லிங்க வடிவில் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.

கோரக்கர் சீனாவில் இருந்துள்ளார், பின்னர் தமிழகம் வந்து சில வருட தவ வாழ்க்கைக்குப் பின் தில்லைவனம் சென்று சிதம்பர ரகசியத்தை உருவாக்கியதில் போகருடன் இருந்திருக்கிறார். போகரின் மறுவருகை பற்றியும் தமிழகத்தின் எதிர்காலம் பற்றியும் கோரக்கர் ‘சந்திரசேகை 200’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

கோரக்கரின் பூர்வ ஜென்மத்தில், அத்திரி என்ற முனிவருக்கு எட்டு சீடர்கள் இருந்தனர். அவர்களில் கோரக்கரும் ஒருவர். கோரக்கரின் குருபக்திகாக அத்திரி மகரிஷி தாம் தவம் செய்ய அத்திமரத்தடியில் தண்டத்தால் தட்டி, தம் கமண்டலத்திலுள்ள நீரைத் தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில் கோரக்கரை நீராடச் செய்தார். இன்றும் அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது.அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோயில் உள்ளது. இங்குள்ள ஆதி சிவசைல நாதர் அத்திரி முனிவரால் வழிபட்டதால் அத்திரிபரமேஸ்வரர் என்றும் கோரக்கரால் வழிபடப்பட்டதால் கோரக்கநாதர் என்றும் திருப்பெயர்கள் கொண்டுள்ளார். இங்குள்ள ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் திருநாமமும் அத்திரிபரமேஸ்வரி என்பதே ஆகும்.

கோரக்கர் எழுதிய நூல்கள்:
1. கோரக்கர் சந்திர ரேகை, 2. கோரக்கர் நமநாசத் திறவுகோல், 3. கோரக்கர் ரக்ஷமேகலை,
4. கோரக்கர் முத்தாரம், 5. கோரக்கர் மலைவாக்கம், 6. கோரக்கர் கற்பம், 7. கோரக்கர் முத்தி நெறி,
8. கோரக்கர் அட்டகர்மம், 9. கோரக்கர் சூத்திரம், 10. கோரக்கர் வசார சூத்திரம், 11. கோரக்கர் மூலிகை,
12. கோரக்கர் தண்டகம், 13. கோரக்கர் கற்ப சூத்திரம், 14. கோரக்கர் பிரம்ம ஞானம்

கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்:
1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு)
4. வடக்கு பொய்கை நல்லூர்
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (வட நாடு)

இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். கோரக்கர் பொய்கை நல்லூரில் சமாதி காலம் கி.பி. 1233ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்திருந்தார் என கூறப்படுகிறது. போகரும் கோரக்கரும் பழனியில் முருகன் சிலையை சிலை செய்து அதனை பழனியில் நிறுவியபின் ஆசிரமத்தையும் கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்துவிட்டு கோரக்கரை தனிமையில் அழைத்து தன்னை பழனியில் சமாதி வைத்த பின் நீ வடக்குப்பொய்கை நல்லூர் சென்று அங்கேயே நீ தவம் செய்து கொண்டிரு நான் என் சமாதியில் இருந்து வெளிப்பட்டு நான் அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்று போகர் கூறினார்.

அதன்படி கோரக்கர் போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரதிரத்தன்று சமாதி அடைந்து விடுவேன் என்று கூறி வடக்குப்பொய்கை நல்லூர் வந்து சேர்ந்தார். கோரக்கர் சமாதிநிலை அடைவதை காண எல்லா சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் அடியார்களும் மற்றும் பக்தர்களும் அவ்வூர் மக்களும் கூடியிருந்தனர்.அப்போது கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.அப்போது போகர் கோரக்கரை பார்த்து கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று வாழ்த்து கூறினார்.மேலும் எதிர்காலத்தில் நடக்க போகும் பல அதிசயங்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

அதன் பின் கோரக்கர் சமாதியில் இறங்கினார்.அப்போது வானவர்களும் சித்தர்களும் முனிவர்களும் ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தார்கள்.அப்போது அம்மையும் அப்பனும் கோரக்கருக்கு நேரில் காட்சி அளித்தனர்.போகர் அவரை சமாதியில் அடக்கம் செய்தார். எனவே தான் கோரக்கர் சமாதியான இடத்தில் ஈசன் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன, இன்றும் சிவசக்தியின் திருவருளும் கோரக்கர் சித்தரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது. கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிவிதமான சக்தி உண்டு. குருவாரம்,பௌர்ணமி,அம்மாவாசை போன்ற நாட்களில் மகான் அருள் வேண்டி இரவில் பக்தர்கள் அங்கு தங்கி செல்கிறார்கள்.

கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும் இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இரவில் ஆசிரமத்தின் பூசாரி, தன் தோளில் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். அன்னக்காவடி தர்மம் என ஓவ்வொரு வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது, பிறகு பூசை செய்த சுத்த அன்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது. இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர் பக்தர்கள்.

பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தின் வெளியில் வலதுபுறத்திலுள்ள வன்னிமரத்தடியில் சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார். ஐப்பசி பௌர்ணமி நாளில் வடக்கு பொய்கை நல்லூரில் வழிபடுபவர்க்கு இன்றும் வரம் பல அருளுகிறார்.

இன்றளவும் குருமுகாந்திரமாக தீட்சை பெற்று சித்தரானவர்கள் கோரக்கரை வழிபட்டால்தான் சுருதியின் உண்மை நிலையை உணரமுடியும் என்கிற நிலை விளங்கி வருகின்றது.

போன்:  -

-
அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

வடக்கு பொய்கை நல்லூர்  நாகை – திருத்துறைப்பூண்டி பேருந்து வழித்தடத்தில் நாகையிலிருந்து 4 கி.மீ. தொலைவில்  உள்ளது. நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈச்சங்குப்பம், அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியாகவும் வடக்கு பொய்கை நல்லூர்  வரலாம்.


கோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவர், 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார்.

நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுனர்.

கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம் வடக்கு பொய்கை நல்லூர். கோரக்க சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.

இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு,கோரக்கர், தான் இயற்றிய பதினாறு நூல்களையும் சுருக்கித் தொகுத்து, ‘சந்திரரேகை’ என்று ஒரு நூலை உருவாக்கினார்.

போகரின் மறுவருகை பற்றியும் தமிழகத்தின் எதிர்காலம் பற்றியும் கோரக்கர் ‘சந்திரசேகை 200’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.