கைலாசநாதர் கோயில் - தல வரலாறு- பாடல் பெற்ற தலம் இல்லை

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : கைலாசநாதர்
இறைவியார் திருப்பெயர் : சிவகாமி அம்மன்,
தீர்த்தம் : தெட்சிணகங்கை
தல மரம் : அரசமரம்
வழிபட்டோர் : மிருகண்டு முனிவர், அகத்தியரின் சீடர் ரோமச முனிவர்,மார்கண்டேயர்,மார்க்கண்டேயரின் வம்சத்தினர்,சோழ மன்னன்,

தல வரலாறு:

இத்திருத்தலம் குருவுக்கான தலமாகும்.

சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக குருவாக தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலம்.

இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது.

இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.

சூரபதுமன் அசுரனின் வழியில் வந்த அசுரன் ஒருவன் முனிவர்களுக்கு செய்த தொல்லையை பொறுக்க முடியாமல் அவர்கள் முறைப்படி நின்று முறையிட்டார்கள். சிவபெருமான் திருவுளம் இரங்கி அவர்களுக்கு அருள் செய்தார். முறைப்படு நாடு முறப்பநாடு எனப் பெயர் பெற்றது என்பது வரலாறாகும்.

சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோயில் கட்டினான். வல்லாள மகராஜா இத்திருக்கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான்.

கல்வெட்டுச் சிறப்பு:

திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி கோயிலிலும் நவகைலாயம் குறித்த கல்வெட்டுகள் உள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது.

குதிரை முக நந்தி: அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு சுவாமி இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக்கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள்.

இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம்போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை காலபைரவர் என்றும், வாகனம் இல்லாதவரை வீரபைரவர் என்றும் கூறுகின்றனர்.

குருதலம்: எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பற்றாக்குறையாக இருக்கிறதே என்ற கவலை இல்லாத மனிதனே இல்லை. பற்றாக்குறை நீங்க வேண்டுமானால், ஆசைகளை குறைக்க வேண்டும். ஆசைகள் குறைய வேண்டுமென்று மனிதன் பேசுகிறான், எழுதுகிறான். ஆனால், நடைமுறையில் முடியவில்லை. அப்படியானால், இந்த சக்தியை இறைவன் தான் தரமுடியும். அதே நேரம், நவீன காலத்திற்கேற்ப சில சாதனங்களும் நமக்கு தேவைபடத்தான் செய்கிறது. எப்படியோ கையிலே நாலு காசு இருந்தால் தான் உலகம் மதிக்கிறது. ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.

சிறப்பம்சம்: இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "நடுகைலாயம்' என்கின்றனர். இங்கு கைலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். சிவகாமி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விநாயகருக்கு சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.


கோவில் அமைப்பு:
பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.

முதலில்  உற்சவர் ஸ்ரீகயிலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கிறார். தெற்குப் பிராகாரத்தில் 63 நாயன்மார்கள் காட்சி தருகின்றனர். இங்குள்ள சுற்றுச் சுவரில் ஸ்ரீஆஞ்சநேயர், கண்ணப்ப நாயனார், கஜேந்திரர், கோமாதா மற்றும் மயில் ஆகிய வடிவங்கள், பஞ்ச லிங்கங்களை வணங்கும் சிற்பம் ஆகியவை  அழகுற செதுக்கப்பட்டுள்ளன. வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் ஸ்ரீசண்டேஸ்வரர் சந்நிதி. வடகிழக்கில் கால பைரவரும் வீர பைரவரும் சேர்ந்து காட்சி தருகின்றனர்.

கோயிலுக்கு எதிரே, ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் தசாவதாரக் காட்சியை தரிசிக்கலாம். 'குரு பார்க்க கோடி நன்மை’ என்பர். ஆகவே, சிவபெரு மானே குருவாக அருள்பாலிக் கும் இந்தத் தலம் வந்து அவரை வழிபடுவோம்; கல்வி- ஞானம் உட்பட கோடானுகோடி நன்மை அடைவோம்!

சிறப்புக்கள் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.

போன்: 98424 04554 / 994311 93076 / 98437 96544

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

இத்திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் முறப்பநாடு உள்ளது. ஊரின் வடக்குப் பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் அமைந்து உள்ளது.


சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக குருவாக தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலம்.

இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது.