வல்லம் குடைவரைக்கோயில் - தல வரலாறு - பாடல் பெற்ற தலம் இல்லை

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

தல வரலாறு:


ஏழாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற ஊரில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய குடவரைக் கோவில் இது. இங்கே ஒரு பெரிய மூதேவியின் சிலைஉள்ளது. சமசுக்கிருதம் எனும் தமிழ்கொண்டு சமைத்த மொழியில் வடிவாய்க் கூறினாலும், அதன் தமிழ்ப்பெயர் மூதேவி என்பதாகும். இம்மூதேவியைத்தான் பல்லவ மன்னர்களும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளனர். அவ்வளவு ஏன்? அவர்களைப் பிற்காலத்தில் வென்றுப் பேரரசை நிறுவிய இடைக்காலச் சோழர்களும்கூட இம்மூதேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் செய்துள்ளனர்.

பல்லவர்கள் கல், மரம் உலோகம், சுண்ணாம்பு இன்றி இயற்கையாய் அமைந்த மலைகளையும் பாறைகளையும் குடைந்து குடவரைக் கோயில்களை உருவாக்கித் தனித்துவம் படைத்தனர். தொண்டை மண்டலத்தில் எங்கெல்லாம் வளமான, நன்கு விளைந்த, முதிர்ந்த பாறைகள் இருந்தனவோ, அங்கெல்லாம் அருமையான கலைக் கோயில்களை உருவாக்கினர். அவ்வாறு உருவான தலங்களுள் ஒன்றுதான் இந்த வல்லம். செங்கல்பட்டு அடுத்துள்ள வல்லம், "பட்சி தீர்த்தம்' என்று போற்றப்படும் திருக்கழுக்குன்றத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் புராண வரலாற்றுக்கும் திருக்கழுக்குன்றத்துக்கும் தொடர்புண்டு.

தொண்டை மண்டலத்தில் குடைவரைகளின் தொடக்க காலத்தில் மகேந்திர பல்லவரால் எடுப்பிக்கப்பட்ட ஏழு குடைவரைகளன்றி ஏழாம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்ட மற்றுமொரு குடைவரை வல்லம் குடைவரையாகும்.

வல்லம் என்னும் சிற்றூர் செங்கல்பட்டு-மகாபலிபுரம் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் வடகோடியில் உள்ள சிறிய குன்றில் மூன்று குடைவரைகள் அமைந்துள்ளன. இக்குன்றினை அடைய படிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் குன்றின் மேலுள்ள முதலிரண்டு குடைவரைகள் பிற்கால கட்டட அமைப்புகளால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. இக்குடைவரைகளுக்கு வடக்கே சற்று கீழ்ப்புறத்தேயுள்ள பாறைச்சரிவில் மூன்றாவது குடைவரை அமைந்துள்ளது. இம்மூன்று குடைவரைகளுமே மண்டபக் குடைவரைகளாகும்.

முதல் குடைவரை

இக்குடைவரையைச் செய்தவர் மகேந்திரவர்மனின் அடியவரான வயந்தப்பிரியரசரின் மகன் கந்தசேனன் என்பதையும், இக்குடைவரை, திருவயந்தீஸ்வரம் என்று அழைக்கப்படுவதையும் குடைவரைக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.

குடைவரைக்குச் செல்லும் படிக்கட்டுகள் முடியும் இடத்தில் குடைவரைப் பாறையின் வடமுகத்தே கிழக்குப் பார்வையாய் அமைந்த கோட்டத்தில் தனியராக ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம் சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது.

குடைவரையின் தென்புறம் கிழக்கு நோக்கிய ஆழமான கோட்டத்தில் லலிதாசனத்தில் பிள்ளையார் சிற்பம் அழகு மிளிரும் வகையில் உள்ளது.

இக்குடைவரை முகப்பு, மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

குடைவரை முகப்பு:

கிழக்கு நோக்கிய குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத் தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பைக் கொண்டுள்ளன. சதுரங்களில் பதக்கங்கள் காணப்படவில்லை.

முகப்புத் தூண்களின் போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் வாஜனம் கூரையையொட்டி அமைந்துள்ளது. நன்கு வெளிநீட்டப் பெற்ற கூரை, வடிவமைக்கப்படாத கபோதமாகியுள்ளது.

மண்டபம்:

முகப்புத் தூண்களையடுத்து அமைந்துள்ள மண்டபத்தின் பக்கச் சுவர்கள் வெறுமையாகக் காணப்படுகின்றன. மண்டபக் கூரையை ஒட்டி வாஜனம் ஓடுகிறது. மேற்குச் சுவரின் மையத்தில் கருவறைக்கான வாயில் உள்ளது. கருவறையை அடைய மண்டபத் தரையில் சந்திரக் கல்லாலான ஒரு படியும், அதன் மீது மற்றொரு படியும் அமைந்துள்ளது. கருவறை வாயிலின் இருபுறத்திலும் அணைவுத் தூண்களின்றி அகழப்பட்ட கோட்டங்களில் வாயிற்காவலர்கள் அணி செய்கின்றனர்.

மண்டபத்தின் தென்புறத்தில் மேடையொன்றில் பிள்ளையார், தனது தேவியருடன் முருகன், சண்டேஸ்வரர், நாகம் ஆகிய சிற்பங்களும், வடப்புறம் சிறிய மேடை மீது அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன.

மண்டபத்தின் வடபுறச் சுவரையொட்டி தெற்குப் பார்வையாக ஜேஷ்டா தேவியின் சிற்பம் உள்ளது. மாந்தன், அக்னி மாதாவுடன் அமைந்த நிலையில் இருக்கும் இச்சிற்பம் அவ்வூரின் கோயில் குளத்தில் கிடைத்தது என கோயிலைப் பாதுகாத்து வரும் திரு. செல்லப்ப குருக்கள் கூறினார்.

கருவறை:

கருவறையின் தரை, கூரை, சுவர்கள் வெறுமையாக உள்ளன. தரையின் நடுவே பிற்காலத்தில் அமைக்கப்பட்ட இலிங்கபாணம் பாதபந்த அமைப்பிலான வேசர ஆவுடையாருடன் காணப்படுகிறது.

இரண்டாம் குடைவரை

வசந்தீஸ்வரம் குடைவரையின் நேர் கீழேயுள்ள பாறையினைக் குடைந்து கிழக்குப் பார்வையாக அமைக்கப்பட்டுள்ள இக்குடைவரை முகப்பும், மேற்குச் சுவரில் கருவறையும் கொண்டமைந்த மண்டபம் ஆகும்.

முகப்பு:

மண்டபத்தின் முகப்பில் இருபுறமும் பாறையோடு ஒட்டிய இரண்டு நான்முக அரைத்தூண்களின் மீது அமைந்துள்ள போதிகைகள் உத்திரம் தாங்குகிறது. கூரையொட்டி முகப்பின் நீளத்திற்கு வாஜனம் காணப்படுகிறது. கூரையின் முன் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக அமைந்துள்ளது. முகப்பின் வெளிப்புறத்தில் பாறையின் நீட்சிச் சரிவின் தென் சுவரில் அழகிய பிள்ளையார் சிற்பம் காணப்படுகிறது.

மண்டபம்:

மண்டபத்தின் வட, தென் சுவர்கள் வெறுமையாக உள்ளன. பின்சுவரின் நடுவே கருவறையும், வாயிலும் அகழப்பட்டுள்ளது. கருவறை வாயில், உறுப்பு வேறுபாடற்ற நான்முகத் தூண்களைக் கொண்டுள்ளது. கருவறையின் இருபுறத்திலும் அகலமான, ஆழம் குறைவான கோட்டங்களில் வாயிற்காவலார்கள் இடம் பெற்றுள்ளனர்.

கருவறை:

கருவறையின் தரை, சுவர்கள், கூரை அனைத்தும் நங்கு சமன் செய்யப்பட்டு, ஆனால் வெறுமையாக காணப்படுகிறது.

மூன்றாம் குடைவரை

மேற்கூறிய குடைவரைகளுக்கு வடக்கில் தாழ்வான பாறைச்சரிவில் கிழக்குப் பார்வையாக இம்மூன்றாம் குடைவாரை அமைந்துள்ளது.

இம்மண்டபக் குடைவரை முகப்பு, மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

முகப்பு:

முகப்பின் வட, தென் சுவர்களையொட்டி இரண்டு நான்முக அரைத்தூண்கள் அமைந்துள்ளன. இவற்றின் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. இவ்விரு அரைத்தூண்களுக்கிடையில் தூண்களற்ற நிலையில் போதிகையின் விரிகோண அமைப்புகள் காட்டப்பட்டுள்ளன. உத்திரத்தினையடுத்து கூரையைத் தழுவி வாஜனம் முகப்பு முழுவதும் காணப்படுகிறது. கூரையின் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாய் அமைந்துள்ளது.

மண்டபம்:

மண்டபத்தின் தென்சுவர் வெறுமையாக விடப்பட்ட நிலையில் அதன் வடசுவரில் அகழப்பட்டுள்ள கோட்டத்தில் நின்ற நிலையில் கொற்றவையின் சிற்பம் அமைந்துள்ளது. பின்சுவரில் நடுவில் வெட்டப்பட்டுள்ள வாயிலின் இருபுறத்திலும் உள்ள கோட்டங்களில் வாயிற்காவலர்கள். கருவறை வாயிலின் முன்னே முதல் படி நிலாக்கல்லாகவும், அதையடுத்து இரண்டாவது படியும் உள்ளன.

கருவறை:

கருவறையில் பீடங்களின் மீது காட்சியளிக்கும் திருமால் தன் தேவியருடன் னின்ற நிலை சிற்பங்கள் பிற்காலத்தயவை ஆகும்.

கல்வெட்டுகள்:

முதற் குடைவரையில் நான்கு தமிழ்க் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பகாப்பிடுகு, தத்ருமல்லன், இலளிதாங்குரன், குணபரன் போன்ற முதலாம் மகேந்திரவர்மரின் விருதுப் பெயர்களும், இக்குடைவரையை செய்தவர் மகேந்திரவர்மரின் அடியவரான வயந்தப்பிரியரசரின் மகனான கந்தசேனன் என்ற செய்தியும் காணக் கிடைக்கின்றன. அத்துடன் கோப்பெருஞ்சிங்கன், முதலாம் இராஜராஜர் கல்வெட்டுகளும் முதலாம் குடைவரையில் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டாம் குடைவரையின் முகப்பு உத்திரத்தின் வடபுறத்தே அக்குடைவரையை அமைத்தவராக இலக்க சோமாசியரின் மகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மூன்றாம் குடைவரையில் இரண்டாம் குடைவரையினைப் போலவே முகப்பு உத்திரத்தின் வடபுறத்தில் அக்குடைவரையை அகழ்ந்தவர் பல்லவப் பேரசரின் மகள் கொம்மை என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.


போன்:

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு செங்கல்பட்டிலிருந்து வெறும் நான்கே கிலோமீட்டரில் இருக்கும் இவ்விடம் மிகஅமைதியாக உள்ளது. எதிரிலேயே ஒரு அரசுப்பள்ளி, அதற்குள் இருக்கும் நாகச் சிலைகள்... கட்டாயம் இத்தகைய அமைதியான சூழலில் படிக்கும் பிள்ளைகள், நல்ல அமைதியோடும் அறிவுத் தெளிவோடும் வளர்வர் என்பது திண்ணம்.


தொண்டை மண்டலத்தில் குடைவரைகளின் தொடக்க காலத்தில் மகேந்திர பல்லவரால் எடுப்பிக்கப்பட்ட ஏழு குடைவரைகளன்றி ஏழாம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்ட மற்றுமொரு குடைவரை வல்லம் குடைவரையாகும்.