இறைவர் திருப்பெயர் : சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவியார் திருப்பெயர் : மங்களநாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : மங்களதீர்த்தம்
வழிபட்டோர் : அம்பிகை, சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள், அங்காரகன்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,
தல வரலாறு:
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.
ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனை தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வ மரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார்.
இதனால் அம்பிகை "மங்களாம்பிகை' என்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை "மங்கள தீர்த்தம்' ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது.
பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால், சூஷ்மபுரீஸ்வரம் என்று இவ்விடம் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலில் சூரியனும், சனீஸ்வரனும் அருகருகே இருப்பது சிறப்பாகும். மேலும் சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதாகும். அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும்.
அங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.
நவக்கிரக மண்டப சிறப்பு: இந்தகோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனை காப்பாற்ற சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் "நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்து' என சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார்.
இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.
கோவில் அமைப்பு:
மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர். இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று.
நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாக தோற்றமளிக்கிறார்.
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் தடைபெறுகிறது.
முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சுயம்புத் திருமேனி. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவேயுள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர்.
லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவையும், வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரையும் காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.
உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி தரும் அழகு பார்க்க வேண்டியதாகும். இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய் வழிபாடு விசேஷமானது. ஆலயத்திற்கு வெளியே நேரே எதிரிலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள் கூட இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்கலாம்.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார்.
சிறப்புக்கள் :
சூஷ்மபுரீஸ்வரரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.
சிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம்.
போன்: -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் 3 கி. மி. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது.
© 2017 easanaithedi.in. All rights reserved