இறைவர் திருப்பெயர் : சித்த நாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : சௌந்தர நாயகி, அழகாம்பிகை
தல மரம் : பவளமல்லி
தீர்த்தம் : சித்தநாத தீர்த்தம், சூலதீர்த்தம்
வழிபட்டோர் : மேதாவி மகரிஷி, கோரக்க சித்தர், நரன், நாராயணர்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 65வது தலம்.
மகாலட்சுமியின் அவதார தலம்.
மகரிஷியான மேதாவிக்கு, ஒருசமயம் மகாலட்சுமியே தனது மகளாக பிறக்க வேண்டுமென ஆசை எழுந்தது. அதற்காக அவர் இத்தலத்திலுள்ள தீர்த்தக் கரையில், வஞ்சுள மரத்தின் அடியில் சிவனை வேண்டி தவமிருந்தார். மேதாவியின் பக்தியில் மகிழ்ந்த சிவன் திருமாலிடம், மகாலட்சுமியை மேதாவியின் மகளாக பிறக்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டார். திருமாலும் சம்மதித்தார். ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் மகாலட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்த மகரிஷி, திருமாலுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். மேதாவி மகரிஷிக்கு காட்சி தந்த சிவன், இத்தலத்தில் எழுந்தருளினார்.
சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது. நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரத மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவநிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார். நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக் காணலாம்.
மழலை மகாலட்சுமி: இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதி முன்பு கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது இவளுக்கு 108 தாமரை மலர்களை படைத்து பூஜிக்கிறார்கள். இவளுக்கு அருகில் முருகன் தனிசன்னதியில் இருக்கிறார்.
கோரக்க சித்தர் வழிபாடு: சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல்வியாதி உண்டானது. நோய் நீங்க அவர் இங்கு சுவாமியை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். கோரக்க சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர், "சித்தநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.
கோவில் அமைப்பு:
சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்கு திசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது.
ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை. கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது. பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும். மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.
இறைவி சௌந்தர நாயகி அம்பாள் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள். குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது. மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.
சிறப்புக்கள் :
மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.
போன்: -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது.
© 2017 easanaithedi.in. All rights reserved