கச்சி அநேகதங்காபதம் அனேகதங்காவதேஸ்வரர் - தல வரலாறு

 

 

படங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : அநேகதங்காபதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : காமாட்சி அம்மன்
தல மரம் : -
தீர்த்தம் : தாணு தீர்த்தம்
வழிபட்டோர் :சுந்தரர், வல்லபை,குபேரன்
தேவாரப் பாடல்கள் :சுந்தரர்- தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்.


தல வரலாறு:
அனேகதங்காபதம் என்ற பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு தலமிருப்பதால் அதனின்றும் வேறுபாடு அறிய இத்தலத்தை கச்சி அனேகதங்காவதம் என்றழைக்கப்படுகிறது.

விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், விநாயகர், வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு அருகம்புல் சாத்தி, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் திருமணம் நடக்கும் என நம்புகின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 237 வது தேவாரத்தலம் ஆகும்.

குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை. அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் . விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி, "அநேகதங்காவதேஸ்வரர்' எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர் என்றும் பெயர் உண்டு.

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு "வல்லபை' என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும்முன்பு, இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். இது குபேரன் வழிபட்ட பெருமை மிக்க தலமும் கூட.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும், கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. . இந்த வாயிலகள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் நாம் நேரே காண்பது பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவார மூவர் சந்நிதியைக் காணலாம். மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். மூலவர் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் நமக்கு அருட்காட்சி தருகிறார். கோஷட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.

சிறப்புக்கள் :

சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.

இது குபேரன் வழிபட்ட தலம் .

போன்:  +91- 44 - 2722 2084, 096528 30840

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
இத்திருத்தலம் காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் பிரபல சுற்றுலா மையமான கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.


வழிபடுவர்கள் பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்,