ஜலநாதேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் :ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்
இறைவியார் திருப்பெயர் : கிரிராஜ கன்னிகாம்பாள்
தல மரம் : - தக்கோலம்
தீர்த்தம் : - நந்தி தீர்த்தம், கல்லாறு
வழிபட்டோர் : காமதேனு, அருணகிரிநாதர், இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர்,
தேவாரப் பாடல்கள் :-அப்பர், சம்பந்தர், சுந்தரர்

இந்த தலம் ஓரு குரு பரிகார ஸ்தலம்.

இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது.

இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு பார்த்திருப்பதால் மிகவும் சக்தி உள்ளவளாக திகழ்கிறாள்.

நர்த்தன நிலையில் (உத்கடி ஆசனத்தில்) தெட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் வேறு எங்கும் காண முடியாதது.

ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.

பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள்.

தல வரலாறு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 245 வது தேவாரத்தலம் ஆகும்.

இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றது. குசத்தலை என்றழைக்கப்படும் கல்லாற்றுக்கரையில் அமைந்த இத்தலத்தில் சம்வர்த்த முனிவர் வழிபட்டுள்ளார். நந்தியின் வாய் வழியே கங்கை நீர் வந்ததாகக் கூறப்படுகிறது. நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர். வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது.

உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.

தட்சன் நடத்திய யாகத்திற்கு அவனது மகள் தாட்சாயணி (பார்வதி) சென்ற போது, அவளை அவன் அவமானப்படுத்தினான். சிவன் தட்சனின் தலையை அறுத்தார். அவனும், தன் சொல் மீறி சென்ற பார்வதியும் பூலோகத்திலுள்ள க்ஷீர நதிக்கரையில் (பாலாறு) தன்னை நினைத்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி, தட்சன் சிவனை வழிபட்டு ஆட்டுத்தலை பொருத்தப் பெற்றான்.

தாட்சாயணி இங்கு வந்த போது, பாலாற்றில் பெருவெள்ளம் சென்றது. அவள் நதிக்கரையில் உள்ள மணலை அள்ளி லிங்க வடிவமாக்கி வழிபட்டாள். தியானத்தில் இருந்தபோது வெள்ளம் லிங்கத்தை சூழ்ந்தது. லிங்கத்தை காப்பாற்றுவதற்காக அவள் அதனை அணைத்துக் கொண்டாள். இந்த லிங்கமே இப்போது இக்கோயிலில் இருக்கிறது. பார்வதி லிங்கத்தை அணைத்த தடமும் லிங்கத்தில் இருக்கிறது.

தெட்சிணாமூர்த்தி: கோஷ்டத்திலுள்ள யோக தெட்சிணா மூர்த்தி, கல்லால மரத்தின்கீழ் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது காலை கீழே தரையில் வைத்து உத்கடி ஆசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். மனம் அலைபாயும் மாணவர்கள் இவரை வணங்கலாம். ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும் உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. இவர் தலையை இடதுபுறம் சாய்த்து, மாணவர்களை அடக்கி ஆளும் ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார். இந்த அபூர்வ கோலத்தை வேறெங்கும் காணமுடியாது.

கோமுகி: சிவன் சன்னதியிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகி, பூதகணத்தின் முகமாக வித்தியாசமாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் நின்ற நிலையில் காட்சி தரும் கிரிராஜ கன்னிகாம்பாளை தரிசித்து விட்டுதான் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை சாந்தமே வடிவ மாக அருள் செய்கிறாள்.

கோவில் அமைப்பு:
சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது.

வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன காட்சி தருகிறாள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது.

அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார்.

லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை. விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது.

சிறப்புக்கள் :
இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது.

விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

போன்:  - -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.


இந்த தலம் ஓரு குரு பரிகார ஸ்தலம்.

நர்த்தன நிலையில் (உத்கடி ஆசனத்தில்) தெட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் வேறு எங்கும் காண முடியாதது.

பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள்.

இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது.

விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.