வீழிநாதேஸ்வரர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : வீழிநாதேஸ்வரர்,விழியழகர், நேத்திரார்ப்பணேசுவரர்,
இறைவியார் திருப்பெயர் : சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை),
தல மரம் :வீழிச்செடி,
தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம் (முதலான 25 தீர்த்தங்கள்),
வழிபட்டோர் :திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்,

தல வரலாறு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறா்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

பார்வதி தேவி கார்த்தியாயினி ஆக மறு பிறவி எடுத்து சிவ பெருமானை இங்கு மணந்தாக வரலாறு.

இத்தலத்தில் சிவ பெருமான் சுவேது கேதுவின் பொருட்டு எமனை காலால் எட்டி உதைத்து சிரஞ்சீவியாக வாழ் அருள் புரிகிறார் . அதனால் இத்தலம் எமபயம் நீக்கும் இடமாக விளங்குகிறது.

இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது.

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் "கண்மலர்' காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்.

காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார். முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். நடராசர் சந்நிதி சிறப்பானது.இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூல்வர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருக சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன. இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம். பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன. சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது. உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான். எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன். அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததுபோல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார். பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இனி தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.


போன்:  +91-4366-273 050, 94439 2482

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து அங்கிருந்து 10 கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம். திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சிவபெருமான் எமனைக் காலால் உதைத்து, இனி தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.

பார்வதி தேவி கார்த்தியாயினி ஆக மறு பிறவி எடுத்து சிவ பெருமானை இங்கு மணந்தாக வரலாறு.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.