எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : எழுத்தறிநாதர்
அம்மன்/தாயார் : நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள்
தல விருட்சம் : செண்பகமரம், பலா
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், அகத்தியர், தேவேந்திரனின் வாகனமான ஐராவதம், சந்திரன்,
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் -

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 45 வது தேவாரத்தலம் ஆகும்.

இது சூரியன் பூஜித்த தலமாகும்.

காவிரியின் வடகரையிலுள்ள இத்தலம் ஒரு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகிறது. அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும்.

ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான்.

"இன்னன்’ என்றால் "சூரியன்’ என பொருள். "இன்னன் நம்பூர்’ என பெயர் இருந்து "இன்னம்பூர்’ என மாறிவிட்டது.

அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது.

பங்குனி 13,14,15, ஆவணி 31, புரட்டாசி 1,2 ஆகிய தேதிகளில் சூரிய வெளிச்சம் சுவாமிமீது படுகிறது.

தல வரலாறு:

முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும் என்று யோகிகளிடம் கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பரில் உள்ள (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் எனக் கூறுகின்றனர்.

இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுகின்றார்.   சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான்.  தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார்.

ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ""ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன்,சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான்.

சுவாமிக்கு "எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெய்ரும் ஏற்பட்டது. "அட்சரம்' என்றால் "எழுத்து'. இது சுயம்புலிங்கம் என்பதால் "தான்தோன்றீயீசர்' என்றும் பெயர் உள்ளது.

கோவில் அமைப்பு:

21.6.2000 இல் குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு காணப்படுகிறது. 16/09/2013 ல் குடமுழுக்கு நடைபெற்றது.கல்வி அபிவிருத்தியை தரும் ஸ்தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது.

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரத்தைக் காணலாம். இங்கு முதலில் நாம் காண்பது விநாகயரையும் அதன் பின் உள்ள நந்தி மண்டபம். உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன.

இந்த கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு தோக்கிய சந்நிதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இந்த அம்பாளே பிரதான அம்பாளாகும். மற்றொரு அம்பாள் சந்நிதியும் இங்குள்ளது. அம்பாளின் பெயர் நித்யகல்யானி என்கிற சௌந்தர நாயகி.

நந்தி மண்டபத்திற்கு பின்னாலுள்ள இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இத்தல இறைவன் எழுத்தறிநாதர் அருட்காட்சி தருகிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். இறைவன் சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, காட்சிகொடுத்த நாதர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். பாலசுப்பிரமணியருக்கு தனி சந்நிதி உள்ளது. கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் மூர்த்தமும் காண வேண்டிய ஒன்றாகும்.

சிறப்புக்கள் :

பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது.

பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறும் என்பது நம்பிக்கை.

குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.

திருவிழா:

ஆனி மாதம் திருக்கல்யாணம், கார்த்திகை,சோம வாரங்கள்,நவராத்திரி,திருவாதிரை.

போன்:  -

குருக்கள் 96558 64958

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன.


இது சூரியன் பூஜித்த தலமாகும்.

அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது.

பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பூர்.

நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.

இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.

கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது.