இறைவர் திருப்பெயர் : வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்,
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்,
தல மரம் :வில்வ மரம்,
தீர்த்தம் : பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம்(அருச்சுன தீர்த்தம்), முள்ளியாறு்,
வழிபட்டோர் :விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், அருச்சுனன், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,
தல வரலாறு:
இத்தலத்தில் சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார்.
சுவாமி விபுலானந்தர் இயற்றிய யாழ் நூல் அரங்கேறிய திருத்தலமும் இதுவே.
பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. சித்த சுவாதீனம் உள்ளவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி
காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது.
ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம். வலதுபுறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது.
5 நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன. வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.
அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
முள்ளியாறு என்றும் அகத்திய காவேரி என்றும் அழைக்கப்படும் ஆறு கோயிலுக்கு மேற்கே ஓடுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடஞ்செலுத்தியது. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் மாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர். இது ஓடம்போக்கி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
போன்: +91- 4366 - 262 239.
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved