இறைவர் திருப்பெயர் : நாகேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பிரஹந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், ஆதிசேஷன்,
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 90 வது தேவாரத்தலம் ஆகும்.
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான்.
ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் தியை தருவதாக உறுதியளித்தார். பரிபூரணதி பெற்ற ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம் என போற்றப்பட்டது.
அவ்விடத்தில் இக்கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் , பாதாள பீஜநாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. மடந்தை பாகர், செல்வபிரான் என்றும் சுவாமிக்கு பெயர்கள் உண்டு.
கோவில் அமைப்பு:
கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் நாகேஸ்வரன் கோவில் என்ற பெயரில் எல்லோராலும் அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள் நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சிங்கமுக தீர்த்தக்கிணறு உள்ளது. படிகள் இறங்கிச் செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. தெற்கிலுள்ள போபுர வாயில் வழியாகவும் இந்த வெளிப் பிரகாரத்திற்கு வரலாம்.
அடுத்துள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் இடதுபுறம் பதினாறுகால் மண்டபமும் வலதுபுறம் நடராசசபையும் உள்ளன. இந்த நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத் தக்கவையாகும். குதிரைகளும், யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது.
அடுத்துள்ள வாழில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. உயரமான ஆவுடையார் மீது மிகவும் குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். கருவறைச் சுற்றில் கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலை மீது கை ஊன்றி நிற்கும் நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலத்திலுள்ள மற்ற சந்நிதிகள் - பிரளயகாலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள், வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
இத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு சித்திக்கும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும்.
இக்கோயிலின் சிறப்பம்சமே இந்த பிரளயகால ருத்திரர் சன்னதிதான். சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன. இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.
சிறப்புக்கள் :
இந்தச் சன்னதியில் ஞாயிறு மாலை 4.30 - 6.00க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்தால் சகலநோய்களும் நீங்கும்.
இறுதிக்காலத்தில் உண்டாகும் மரண துன்பம் அறவே இல்லாமல் போகும்.
ரிஷபத்தின் முன்நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுகூடுவர்.
பிரியாமல் இருப்பவர்கள் எந்நாளும் பிரியமாட்டார்கள்.
நடராச மண்டபம். ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது.
போன்: -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
இத்தலம் கும்பகோணம் நகரில் நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் இருக்கிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved