வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் :வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர், தேவர்சிங்கப்பெருமான்
இறைவியார் திருப்பெயர் : வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்
தல மரம் : - பலா, ஆலமரம்
தீர்த்தம் : -  சென்றாடு தீர்த்தம், முத்தி தீர்த்தம்
வழிபட்டோர் : காரைக்கால் அம்மையார், முஞ்சிகேச கார்க்கோடக முனிவர், சுநந்த முனிவர்
தேவாரப் பாடல்கள் :-திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்

வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது.

இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும்.

திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும்.

தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

தல வரலாறு:

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார்.

அவரை கண்ட காளி, நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம், என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.


இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.

திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் அருள்புரிந்த சிறப்புப் பதியாதலால் அவர் நிலவிய இப்பதியைத் தம் கால்களால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் வெளியே தங்கி இருந்தமை கருதத்தக்கது. நீலி என்பவளின் பொருட்டு வணிகன் ஒருவனுக்குத் தாங்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் 70 வேளாளர்கள் உயிர்த் தியாகம் செய்த வரலாறு பெரிய புராணத்தில் சாற்றப்பட்டுள்ளது. இவ்வேளாளர்கள் பழையனூரைச் சேர்ந்தவர்களாவர். அவ்வூர் இத்தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் அம்மையப்பர் ஆகும். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி. மார்கழித் திருவாதிரை இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வூரில் ஓர் வணிகனுக்கும், நீலி என்ற மங்கைக்கும் வழக்கு ஒன்று நடந்தது. இன்று இரவு நீலி தன்னை கொன்று விடுவாள் என்று வணிகன் கூறினான். பெண் உருவம் கொண்ட நீலியும் தன் கணவனை தன்னுடன் இன்று இரவாவது தங்கும்படி வழக்கு மன்றத்திடம் கேட்டுக்கொண்டாள். நீலி கண்ணீருக்கு இரங்கிய சைவ வேளாளர்கள் எழுபது பேரும் நீலி என்பவள் குடும்பப் பெண் என்றும் அன்று இரவு வணிகனை அவளுடன் தங்கியிருக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். மறுநாள் வணிகனின் இறந்த உடலை சபையோர் கண்டனர். வணிகனின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து அவனை தங்கச் சொல்லியதால்தான் அவன் இறந்தான் என்பதால் அவ்வணிகனுக்குத் தாங்கள் கொடுத்த வாக்கின்படி சைவ, வேளாளர்கள் எழுபது பேரும் தீ எழுப்பி ஒரேநேரத்தில் திக்குளித்து மாண்டனர். வாய்மைக் காப்பதில் இப்பகுதி வேளாளரும் சிறந்து இருந்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

கோவில் அமைப்பு:
கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.

நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார்.

ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயில் உள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை.

இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகில்ள்ளன. இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

சிறப்புக்கள் :
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

காளியை வழிபாடு செய்த பின் மூலவரை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்.

போன்:  - 99407 36579

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது.


வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது.

இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும்.

இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும்.

காளியை வழிபாடு செய்த பின் மூலவரை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்.